இதயமற்ற மரணம்
மரணமே உனக்கு இதயம் இல்லையோ? பால்மணம் மாறா பச்சிளம் மண்ணை புற்றுநோய் பெயரால் புதைக்க வைத்தாய், மணக்கோலம் மறவா புது மணவாளனை மண் வண்டி உருவில் மண்ணாக்கினாய், கைக்குழந்தை ஏந்தி நிற்கும் காரிகையை கைம்பெண்ணாக்கி அமைதி கொண்டாய், வரனை வரமாய் கேட்டவளை வரதட்சணை உருவில் வஞ்சித்து வதைத்தாய், காட்டாற்று வெள்ளமென கரைபுரண்டோடி ஊரையே கவர்ந்தெடுத்தாய், அப்பா என அழைத்து ஆசை தீரும் முன்னே அப்பால் அழைத்து சென்று விட்டாய், அம்மா என்ற தணலில் துணிவாய் நின்றவளை தனியாய் தவிக்க விட்டுவிட்டாய், கொள்ளி வைக்க என் மகன் இருக்கிறான் என்றவரை, ஐயோ! என் மகனே என கர்மம் செய்ய வைத்துவிட்டாய், கோடி வைக்க மகள் ஓடி வருவாள் என்ற தாயை என் மகளே! என ஓலமிட செய்தாய், கொலை செய்யும் கொடூரனுக்கு காவலுக்கு நிற்கிறாய், பாமரனை பந்தாடும் பாதகனுக்கு பக்க பலம் ஆகிறாய், மரணம் நோக்கி இருப்பவனை கண்டு முகம் சுளித்து செல்கிறாய், மரணமே உனக்கு இதயம் இல்லையோ? கண்மூடி கடவுளை கேட்கிறேன் உனக்கு இதயம் அளிக்க, இழப்பின் வலி புரிய வைக்க. - மஞ்சு
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
